கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் குழு அறிக்கை: உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்ட ஆணையர் சகாயம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சகாயத்தின் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா தலைமையிலான அமர்வு முன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 விசாரணை நடைபெற்ற விதம்

 மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரனைட் முறைகேடுகளால் தமிழக அரசிற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு அறிக்கை அளித்தார்.

 அதனடிப்படையில் மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து மேலூர், கீழவளவு மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையங்களிலும், மாவட்ட குற்றப்பிரிவு துறையிலும் சட்டவிரோத கிரனைட் முறைகேடு, நிலமோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 அதைத் தொடர்ந்து பிஆர்பி,மதுரா,சிந்து, ஜெம் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் மீது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சட்ட ஆணையம் ஒன்றை அமைத்து கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து,கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார் சட்ட ஆணையர் சகாயம்.

 முதல்கட்ட விசாரணையில் கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் புகார்களைப் பெற்றார். அதில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மோசடி, கொலை மிரட்டல், நரபலி உள்ளிட்ட200-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன.

 அடுத்தகட்ட விசாரணையில் புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக சந்தித்து கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர், விவசாய விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டார்.

 இவ்விசாரணையில் மலைகள் குன்றுகளாகவும், நீர்நிலைகள் சாதாரண இடங்களாகவும் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்ததோடு, வருவாய் கணக்குகளும் திருத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் முறைகேடுகள் நடைபெற்ற குவாரியின் காட்சிகள் முழுவதையும் பதிவு செய்தார். புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து அவர்கள் குற்றச்சாட்டுகளையும், வாக்குமூலங்களையும் வீடியோ பதிவாக பெற்றார்.

 இதனைத்தொடர்ந்து வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறை என அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து கிரனைட் முறைகேடுகள், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுவிவரங்களை அளிக்குமாறு கூறினார்.

 அதனடிப்படையில் வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறையினர் தங்களது தரப்புத் தகவல்களை பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்தனர். தொடர்ந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலூர் பகுதியில் மேலூர் காவல் டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. ஒத்தக்கடை பகுதியில் ஊர்மெச்சிகுளம் காவல் உதவி காவல்கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் விசாரணை நடைபெற்றது.

பல்வேறு கட்டங்களாக நகர்ந்த விசாரணையில் அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசமும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. 20-ஆம் கட்ட விசாரணை நடைபெற்ற சூழலில் கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் நரபலி புகார் ஒன்றை அளித்தார்.

 அதில், பிஆர்பி கிரனைட் நிறுவனத்தில், 1999-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை வாகன ஓட்டுநராக தான் பணியாற்றியதாகவும், அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட இருவரை மேலூர் அருகே இ.மலம்பட்டியில் நரபலி கொடுத்து புதைத்ததை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 1999-ல் நடந்ததாகக் கூறப்படும் இ. மலம்பட்டி மணிமுத்தாறு ஓடைப்பகுதிக்கு சென்ற சட்ட ஆணையர் சகாயம் தடயங்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் 12.09.15 அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கினார். சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டும் பணி நடைபெற்றது. மண்டை ஓட்டுடன் கூடிய எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்தும் சில நரபலி புகார்கள் வந்தன.

 அம்பலத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்..

 மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கீழவளவு ஊராட்சி. அங்குள்ள அம்மன் கோவில்பட்டி கிராமத்திற்கும், அடஞ்சான் கண்மாய்பட்டி கிராமத்திற்கும் இடையே அமைந்திருக்கிறது  பொக்கிஷ மலை.

 கி.மு.3ம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு எழுத்தறிவு உண்டு என்பதற்கான அடையாளத்தின் எச்சம் இந்த மலை. இது சர்க்கரை பீர் மலை என்றும் அழைக்கப்பட்டது. இந்து, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர், அந்த மலைக்குச் சென்று வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அப்போது நம்பி வந்ததாகச் சொல்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

 இப்படி மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும், தொன்மையின் உதாரணமாகவும் வீற்றிருந்த பொக்கிஷ மலையின் பெரும்பகுதியை தற்போது காணவில்லை. தலைப்பகுதி உனக்கு, நடுப்பகுதி எனக்கு என அந்த மலையை பிஆர்பி, ஒலிம்பஸ் போன்ற கிரானைட் நிறுவனங்கள் கூறுபோட்டு விழுங்கியதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

 மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்த இந்த மலையில், 35 ஏக்கர் பரப்பளவிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெட்டி எடுக்கப்பட்டிருப்பது சகாயம் குழு ஆய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 பொக்கிஷ மலையின் நிலை இதுவென்றால். கீழவளவு கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததாகக் கூறப்படும் வெள்ளூத்து மலையையே இன்று காணவில்லை. 1 கிலோ மீட்டர் நீளமும் 65 மீட்டர் அகலமும் கொண்ட வெள்ளூத்து மலை முற்றிலுமாக கிரானைட் கொள்ளையர்களால் கபளீகரம் செய்யப்பட்டது சகாயம் ஆய்வின் போது அம்பலமானது.

 இவை மட்டுமல்ல. அரிட்டா பட்டியில் உள்ள புறாக் கூண்டு மலை, கலிஞ்சமலை, ராமாயி மலை, கழுகுமலை, ஆப்டா மலை, தேன் கூடுமலை போன்றனவும் கிரானைட் நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து தப்பவில்லை.

அறிக்கைஉயர்நீதிமன்றம்கிரானைட் நிறுவனங்கள்கிரானைட் முறைகேடுசகாயம் குழுமதுரைவிசாரணை
Comments (0)
Add Comment