கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரானது, வரதய்யபாளையம், காளஹஸ்தி, சத்தியவேடு, சென்னேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக 152 கி.மீ. தூரத்தைக் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஜீரோ பாயின்ட்டை வந்தடைந்தது.
ஜீரோ பாயின்ட்டிலிருந்து ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், மயிலாப்பூர், தேவந்தவாக்கம், நம்பாக்கம், சென்றாயன்பளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 25 கி.மீ கடந்து, பூண்டி ஏரிக்கு புதன்கிழமை அதிகாலை வந்து சேரும்.
பூண்டி ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர், இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும், பூண்டியில் அமைந்துள்ள சென்னை குடிநீரேற்று நிலையத்துக்கும் அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னைக் குடிநீருக்காக அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில், வரலாறு காணாத அளவுக்கு பூண்டி ஏரி வறண்டது. இதனால், பூண்டி ஏரியில் நீர் இருப்பு வெறும் 7.9 கோடி கன அடியாக குறைந்தது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படும் என கிருஷ்ணா திட்ட ஒப்பந்தத்தில் உள்ளது.
அதன்படி, நடப்பாண்டில் ஏற்கெனவே இரண்டு முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டு, முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், வினாடிக்கு 500 கன அடியாக கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், 5-ஆம் தேதி காலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டை வந்தடைந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பரிமேலழகர், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்புப் பொறியாளர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் சீனிவாசராவ், ஆந்திர மாநில பொதுப்பணித்துறை துணைப்பொறியாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.