நாடாளுமன்றத்தில் நேற்று(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஜெனீவா விவகாரம் மீதான சபை ஒத்திவைப்புவேளை நேரத்தில், ஏற்பட்ட சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடரந்து கூறுகையில், “ அவையில் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம், தற்போதும் இதற்கு முன்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியைச் சுட்டிக்காட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் பொறுமையாக இருந்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது. உண்மையான நிலைப்பாட்டைதெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய ஆறு கட்சிகளே நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டுள்ள கட்சிகளாகும். அவற்றைதவிர வேறு எந்தக்கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பவில்லை.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் இருத்தல் அவசியம். எனினும், தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை 30 இல் இலிருந்து 40ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 40 இலிருந்து 48 ஆகவும் அதிகரித்துக்கொள்ளமுடியும். தற்போது அமைந்துள்ள அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனையே இதற்கு முன்னரும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். பிரதான இருகட்சிகளும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய 3 கட்சிகளும் எதிரணியில் இருக்கின்றன. எனவே, எதிரணிப் பக்கம்வந்து ஒருகுழு அமர்வதால் மாத்திரம் எதிர்க்கட்சிக்கான உரிமைகளை வழங்கிவிடமுடியாது. இது தவறான முன்னுதாரணமாகவும் அமையும். எதிர்காலத்தில் அரசாங்கம் அமைந்தபின்னர், அந்த அரசிலுள்ள குழுவொன்றை எதிர் வரிசையில் அமரவைத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அபகரிக்கும் திட்டத்துக்கு அது வழிவகுக்ககூடும். ஆகவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் பாதுகாக்கப்படவேண்டும். மேற்கூறப்பட்ட மூன்று கட்சிகளே எதிர்க்கட்சிகளாக அங்கிகரிக்கப்பட்டுள்ளன. அதில், ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்றுகொண்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அந்தக்கட்சியிலுள்ள குழுவொன்றுவந்து எதிரிணியில் அமர்ந்துள்ளது. இது அவர்களின் உட்கட்சிவிவகாரமாகும்.
ஆகவே, நாடாளுமன்றத்தில் தனியானதோர் அணியாக அவர்களை அடையாளப்படுத்தமுடியாது. இப்படிவந்து அமர்ந்தவர்கள் எதிர்க்கட்சிக்குரிய சிறப்புரிமைகளைக் கோருவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் பிரகாரம், விவாதம் நடைபெறுகின்றபோது எதிர்கட்சிகளுக்கு 60 சதவீத நேரமும் ஆளுங்கட்சிக்கு 40 சதவீத நேரமும் ஒதுக்கப்படும். இந்த நடைமுறையை முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, 50 க்கு 50 என்ற விகிதத்தில் மாற்றியமைத்தார்.
இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். ஆனாலும் எதிரணிக்குரிய அந்த 60 வீத நேர ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தற்போது எதிரணிப்பக்கம் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான எம்.பிக்களே இருப்பதால் 60 வீத நேர ஒதுக்கீட்டை கேட்கவில்லை. 30 சதவீதம் வழங்கினால்போதும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளோம். எனவே, முதற்தடவையாக நாடாளுமன்றத்தில் 70 சதவீத நேரம் ஆளுங்கட்சிக்கும், 30 சதவீத நேரம் எதிரணிக்கும் ஒதுக்கப்பட்டுவருகிறது. அந்த 70 வீத நேர ஒதுக்கீட்டில் 40 சதவீதம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், 30 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் பகிரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு உரிய 30 வீத நேர ஒதுக்கீட்டிலேயே எதிரணி பக்கமுள்ள அந்தக்கட்சி உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இது அவர்களின் கட்சிப் பிரச்சினை. இது நாடாளுமன்றத்துக்கு உரிய காரணமல்ல. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஆளுந்தரப்பில் இருக்கின்றனர். எனவே, இந்தக்குழுவை எதிரணியெனக் கூறமுடியாது.
ஒட்டுமொத்த உறுப்பினர்களும் நாளையே வந்த எதிரணி பக்கம் இருந்தால், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா பதவியையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் வாரத்தில் 4 நாட்களில், ஆளுந்தரப்புக்கு இரண்டு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகளையும் எதிர்க்கட்சிக்கு 2 சபைஒத்திவைப்புவேளை பிரேரணைகளையும் கொண்டுவரமுடியும். இன்றைய தினம் அரசாங்கத்துக்கு உரிய நேரத்திலேயே ஒன்றிணைந்த எதிரணியினர் இந்த பிரேரணையைக் கொண்டுவந்துள்ளனர்” என்றார்.