கொடைக்கானலில் கடும் மழை! ஒருவர் பலி

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று 6-வது நாளாக அதிகாலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகர்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

லாஸ்காட் சாலையில் மின் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக சென்ற மின் வயர்கள் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து அறுந்த மின் வயர்களை மாற்றி சீரமைக்கும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பைன்பாரஸ்ட் பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்து வருகிறார். மாலையில் தனது குதிரையை பாம்பார்புரம் பகுதியில் விட்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அந்த சமயத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அந்த குதிரை மின் கம்பத்தின் மீது உரசியதால் அறுந்து கிடந்த மின் வயர் குதிரை மீது பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து குதிரை உயிர் இழந்தது.

பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. பழனி அருகில் உள்ள பாலசமுத்திரம் 19-வது வார்டைச் சேர்ந்த சவுரியப்பன் (52) என்பவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்யவே நனையாமல் இருப்பதற்காக ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினார். ஆடுகளும் அவரின் அருகில் நின்று கொண்டு இருந்தன. அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சவுரியப்பன் உயிரிழந்தார். 5 ஆடுகளும் பலியாகின. இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்பலிபோலீஸ்மழைமின்னல்விசாரணை
Comments (0)
Add Comment