யாழ். நகரின் புறநகரான பொம்மைவெளி பிரதேச மக்கள் வெள்ளப்பாதிப்பிலிருந்து விமோசனம் கோரி கொட்டும் மழைக்கு மத்தயில் இன்று காலை வீதி மறியல் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து காரைநகர் செல்லும் பிரதான வீதியை பொம்மைவெளிச்சந்தியினில் வழிமறித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.குறிப்பாக இருமருங்கிலும் கற்களைப் போட்டு மறித்து காலை முதல் தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தற்பொது பெய்த வருகின்ற கடும் மழை காரணமாக வெள்ள பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் நோய்கள் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தமக்கான நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரக் கோரியே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் போது இந்தக் கிராமத்தைக் கவனிக்க யாரும் இல்லையா?, நாங்களும் மனிதர்கள்! தான் தேர்தல் காலத்தில் வருபவர்கள் பின்னர் வருவதில்லை! எங்களுக்கும் காணி வீடு வேண்டும்! உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வீதிப்போககுவரத்து தடையானமையால் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது.அங்கு விஜயம் செய்த அதிகாரிகள் சுமூக நிலையினை ஏற்படுத்த முயற்சித்தனர்.