மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு கடற்படை தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விசாகப் பட்டினம் கடற்படை தளத்தில் இருந்து ஐ.என்.எஸ். குக்ரி, ஐ.என்.எஸ். சுமித்ரா ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் கொல்கத்தா ஊக்ளி நதி கழி துறைமுகப் பகுதியில் உள்ள கித்தர்பூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. தொடர்ந்து 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் உள்ள பள்ளி மாணவ – மாணவிகள் போர்க் கப்பல்களுக்குள் அழைத்துச் செல்லப்பட இருந்தனர். இதை அறிந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
கடற்படை தின விழா நடக்கும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் இந்த தாக்குதலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நாசவேலைத் திட்டத்துக்கு லஷ்கர் – இ- தொய்பா, அல்கொய்தா, இந்தியன் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 16 தீவிரவாதிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த சதி திட்டத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும், பாகிஸ்தான் கடற்படையும் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. 16 தீவிரவாதிகளையும் மீனவர்கள் போல சிறு, சிறு கட்டு மரப்படகுகளில் கொல்கத்தாவுக்குள் ஊடு ருவ செய்ய பாகிஸ்தான் கடற்படை உதவிகள் செய்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் சிலரும் இந்த சதி திட்டத்துக்கு தீவிரவாதிகளுக்கு உதவ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே தற்கொலைப் படை தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் கொல்கத்தா துறைமுகத்துக்குள் ஊடுருவ முயற்சி செய்யக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுத் துறையும், தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து மேற் கொண்டுள்ள இந்த நாச வேலை திட்டத்தை இந்திய உளவுத்துறை நேற்று காலை கண்டுபிடித்து மத்திய உள் துறைக்கு அவசரம் அவசரமாக தகவல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசை மத்திய உள்துறை உஷார்ப்படுத்தியது.
அதன் பேரில் நேற்று கொல்கத்தா நகரில் வரலாறு காணாத அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. கொல்கத்தா துறைமுகம் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையம், ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் ஹால்டியா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், கொல்கத்தாவில் கடலோர காவல் படையினரும் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர கொல்கத்தா நகரம் பாதுகாப்பு வளையத்துக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.