கொளுத்தும் வெயிலில் தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கிறது. இந்நிலையில், வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மே 16… தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கிறது. ஏப்ரல் 22–ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

தேர்தல் களத்தில் தொகுதி பங்கீடு முடிந்து அனைத்து அரசியல் கட்சி களுமே பிரசாரகளத்தில் குதித்துவிட்டன. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது போன்று களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை சொல்லி அவர் பிரசாரம் செய்து வருகிறார். சென்னை தீவுத் திடலில் கடந்த 9–ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா மாவட்டங்கள் வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றியை ருசித்தது போல இந்த முறையும் வெற்றி பெற்று விடலாம் என்றே அ.தி.மு.க. கணக்கு போட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க. இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த வெற்றியை எளிதாக்கும் விதத்தில் விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டு தி.மு.க. காய் நகர்த்தியது. ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்காத நிலையில் காங்கிரசுடன் தி.மு.க. கை கோர்த்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23–ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தி.மு.க. கூட்டணியில் பிரசார பீரங்கியாக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இவரும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். அ.தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை பட்டியல் போட்டு பிரசாரம் செய்யும் ஸ்டாலின் அனைத்து இடங்களிலுமே தி.மு.க. தேர்தல் அறிக்கைதான். ‘‘இந்த தேர்தலில் ஹீரோ’’ என்று கூறி வருகிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விளக்கி கூறி ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். இது தி.மு.க.வின் வெற்றிக்கு உதவிகரமாகவே இருக்கும் என்று தி.மு.க.வினர் உறுதியாக நம்புகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறிக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இக்கூட்டணியின் முதல்– அமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த், தனது பாணியில் பிரசாரம் செய்து வருகிறார்.  அ.தி.மு.க., தி.மு.க.வை நம்பி இத்தனை ஆண்டுகள் ஓட்டு போட்டது போதும். இனி மாற்றத்துக்காக மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறி விஜயகாந்த் வாக்கு கேட்கிறார்.

இவரைப் போலவே அவரது மனைவி பிரேமலதாவும் ஓட்டு வேட்டையாடி வருகிறார். இக்கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன் ஆகியோரும் தங்களது பேச்சால் தொண்டர்களை கவர்ந்து வருகிறார் கள். மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதே அக்கூட்டணி தலைவர்களின் தளராத நம்பிக்கையாக உள்ளது. இவர்கள் தவிர நாங்கள் தான் மாற்று என்று கூறிக்கொண்டு களம் இறங்கியுள்ள பா.ஜனதா, தலைவர்களும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரசாரகளத்தில் வலம் வருகிறார்கள். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்து முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தலைவர்களின் இது போன்ற அனல் பறக்கும் பிரசாரத்தால் தமிழக தேர்தல் களம் களை கட்டியுள்ளது. வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைத்து கட்சி தொண்டர்களுமே களப்பணியாற்றி வருகிறார்கள். தலைவர் களின் இந்த பிரசார வேகம் அடுத்த சில வாரங்களில் இன்னும் அதிகரிக்கும். அப்போது கொளுத்தும் வெயிலையும் மிஞ்சும் வகையில் பிரசாரத்தில் அனல் பறக்கும். கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், வேட்பாளர்களும் பம்பரமாக சுழன்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள். தெருவோர கடைகளில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டு விட்டோ அல்லது மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை குடித்துக் கொண்டோ ‘‘மறக்காம ஓட்டு போடுங்க’’ என்று கூறிக் கொண்டே… ஓட்டமும் நடையுமாகவே ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

அரசியல்கட்சிசட்டமன்றம்தமிழகம்தாக்கல்தீவிரபிரச்சாரம்தேர்தல்பங்கீடுவெயில்வேட்பாளர்கள்வேட்புமனு
Comments (0)
Add Comment