கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது

விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை மேலும் குறைந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து–விளைச்சல் அதிகரிப்பு

கடந்தாண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. இந்தநிலையில் இயல்புநிலை திரும்பியதை தொடர்ந்து காய்கறிகள் விலை குறையத்தொடங்கியது. கடந்த வாரம் வெண்டை, கத்தரி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிரடியாக குறைந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், காஞ்சீபுரம், திருவள்ளூர், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை மேலும் குறைந்துள்ளது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:–

காய்கறிகள் விலை குறைவு அண்டை மாநிலங்களில் விளைச்சல் நன்றாக இருப்பதை தொடர்ந்து கூடுதல் லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்தது. தற்போது மேலும் வரத்து அதிகரித்து இருப்பதால், காய்கறிகளின் விலை மேலும் குறைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் உள்ள நிலைமையிலும் மிகுதியான வரத்து காரணமாக காய்கறிகள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது அதிரடியாக குறைந்து ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.80–க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.55 வரை விற்பனையான ஒரு கிலோ கேரட், தற்போது ரூ.35 வரை விற்பனையாகிறது. ரூ.40 வரை விற்பனையான ஒரு கிலோ கத்தரிக்காய், தற்போது ரூ.20–க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பீட்ரூட், அவரைக்காய், பாகற்காய், புடலங்காய், சாம்பார் வெங்காயம் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை சரிந்துள்ளது.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:– பல்லாரி– ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு– ரூ.18 முதல் ரூ.20 வரை, கேரட்– ரூ.30 முதல் ரூ.35 வரை, பீன்ஸ்– ரூ.35, நூக்கல்– ரூ.25 வரை, சவ்சவ்– ரூ.12 முதல் ரூ.15 வரை, பீட்ரூட்– ரூ.30, முட்டைக்கோஸ்– ரூ.15 முதல் ரூ.20 வரை, மிளகாய்– ரூ.35, இஞ்சி– ரூ.45, சேப்பங்கிழங்கு– ரூ.28 முதல் ரூ.30, கத்தரிக்காய்– ரூ.20, வெண்டைக்காய்– ரூ.30, அவரைக்காய்– ரூ.18 முதல் ரூ.20 வரை, கோவைக்காய்– ரூ.20, பாகற்காய்– ரூ.35 முதல் ரூ.45 வரை, முருங்கைக்காய்– ரூ.80, முள்ளங்கி– ரூ.15, வெள்ளரிக்காய்– ரூ.18, புடலங்காய்– ரூ.40 வரை, பூசணிக்காய்– ரூ.15, தக்காளி– ரூ.10, காலிபிளவர்– ரூ.20 முதல் ரூ.25 வரை, பீர்க்கங்காய்– ரூ.20, பச்சை மொச்சை– ரூ.30, சுரைக்காய்– ரூ.20, சாம்பார் வெங்காயம்– ரூ.30 முதல் ரூ.40 வரை, கீரை (கட்டு)– ரூ.10, தேங்காய் (ஒன்று)– ரூ.15 முதல் ரூ.22 வரை, வாழைக்காய் (ஒன்று)– ரூ.3 முதல் ரூ.6 வரை, வாழைப்பூ (ஒன்று)– ரூ.10, வாழைத்தண்டு (பீஸ்)– ரூ.10. இவ்வாறு அவர் கூறினார்.

பழங்கள் விலை அதிகரிப்பு

காய்கறிகளின் விலை குறைந்திருந்தாலும், வரத்து குறைவு காரணமாக பழங்களின் விலை அதிகரித்து உள்ளன. இதுகுறித்து கோயம்பேடு சந்தை அங்காடி விற்பனைக்குழு உறுப்பினர் கே.ஜெயராமன் கூறியதாவது:– வரத்து குறைந்ததின் எதிரொலியாக பழங்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தை காட்டிலும் கொய்யாப்பழம் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு போன்ற பழங்களில் விலையும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, தர்பீஸ், திராட்சை போன்றவற்றின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு அதிகம். கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு: வாஷிங்டன் ஆப்பிள்– ரூ.180, சீனா ஆப்பிள்– ரூ.160, இந்திய ஆப்பிள்– ரூ.130, மாதுளை (காபூல்)– ரூ.130, சாதாரண மாதுளை– ரூ.85 வரை, சாத்துக்குடி– ரூ.60 வரை, ஆரஞ்சு– ரூ.35 முதல் ரூ.45 வரை, கொய்யாப்பழம்– ரூ.40, திராட்சை (கருப்பு)– ரூ.50, கருப்பு சீட்லெஸ் திராட்சை– ரூ.100, பச்சை சீட்லெஸ் திராட்சை (சோலாபூர்)– ரூ.80, தர்பீஸ்– ரூ.15 முதல் ரூ.20 வரை, பப்பாளி– ரூ.22, கிர்ணிப்பழம்– ரூ.25 வரை, சப்போட்டா– ரூ.40 வரை, அன்னாசிபழம் – ரூ.30, இலந்தைப்பழம்– ரூ.15, வாழை (தார்)– ரூ.200 முதல் ரூ.250 வரை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகரிப்புகாய்கறிகுறைவுகோயம்பேடுசந்தைதக்காளிவரத்துவிலைவிளைளச்சல்
Comments (0)
Add Comment