சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக மண்டலம் 10 மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டல நல அலுவலர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழங்கள் கால்சியம் கார்பைடு எனப்படும் ரசாயனக்கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு ரசாயனக்கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மாம்பழங்களையும், 350 கிலோ எடை கொண்ட கால்சியம் கார்பைடு ரசாயன கற்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரசாயனக்கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கும் செயலில் மீண்டும் ஈடுப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள், மற்றும் ரசாயனக்கற்கள் நுங்கம்பாக்கம் மாநகராட்சி குப்பை கூடத்தில் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.