சசிகலாவை வைத்து பிரச்சாரம் செய்யாததற்கு காரணம் இதுதானாம்!

சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் தண்டையார்ப்பேட்டையில் உள்ள தேர்தல் பணிமனையில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- டி.டி.வி.தினகரன் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 100 சதவீதம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- உங்கள் தரப்பில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே?

பதில்:- வேண்டும் என்று திட்டமிட்டு விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். தோல்வி பயத்தால் இப்படி செய்கிறார்கள்.

கேள்வி:- விவசாயிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் முதல்-அமைச்சர் ஆர்.கே.நகரில் பிரசார வேலை பார்த்து வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்:- ஏற்கனவே மு.க. ஸ்டாலின் டெல்லி செல்வதற்கு முன்பாக எங்களுடைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விவசாய பிரதிநிதிகளை சந்தித்து அவர்களை அழைத்து சென்று மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, நீர்வளத்துறை மந்திரியிடம் பேசி இருக்கிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர அவர்களிடம் தம்பிதுரை அக்கறையுடன் பேசியுள்ளார். மத்திய அரசு நாங்கள் கேட்ட வறட்சி நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும்.

கேள்வி:- சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே?

பதில்:- என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். இரட்டை இலைக்கும், இரட்டை விளக்கு மின்கம்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க. வுக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. நிச்சயம் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஆர்.கே.நகர்சென்னைதமிழகம்தேர்தல்பழனிச்சாமி
Comments (0)
Add Comment