சட்டசபை தேர்தலையொட்டி டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க ஐ.ஜி. தலைமையில், டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் முதல் வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் கோலாகலமும் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிதலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார்கள்.

தமிழக போலீஸ் துறையிலும் அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன. உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் சப்–இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகள் கூட மாற்றப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. ஐ.ஜி. தலைமையில், ஒரு சூப்பிரண்டு, 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 2 துணை சூப்பிரண்டுகள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவார்கள். நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள், அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை, எவை என்பது பற்றிய முழுவிவரங்களையும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை செய்வார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாநில போலீஸ் படை, மத்திய போலீஸ்படை பற்றிய விவரத்தையும் சேகரிப்பார்கள். பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த சோதனை சாவடிகள் எங்கெங்கு அமைப்பது என்பது பற்றிய விவரங்களையும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சேகரிப்பார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கி விட்டது.

அறைஅலுவலககட்டுப்பாட்டுசட்டசபைடி.ஜி.பி.தேர்தல்
Comments (0)
Add Comment