யாழ். கொடிகாமம், கச்சாய் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸார் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவர் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கொடிகாமம் – கச்சாய் பகுதியில் கள்ள மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பேர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது, வாகனத்தின் சாரதி நிறுத்தாது வாகனத்தை பொலிஸ் உத்தியோகத்தருக்கு மேலாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன் போது, நான்கு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏனைய மூன்று பொலிஸாரும், விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தப்பி ஓடிய வாகன சாரதிகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவமானது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.