முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்து தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு கடற்தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதற்கமைய கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வட்டுவாகல், நீராவிப்பிட்டி,கிச்சிராபுரம் மீனவ சங்கங்களை சேர்ந்தவர்கள் நந்திகடலில் மேற்கு பகுதியான வற்றாப்பளை தொடக்கம் கேப்பாபுலவுக்கு இடைப்பட்ட செம்மன் மோட்டைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பிடிப்பதற்காக சென்றபோது அங்கிருந்த மீனவர்களுக்கும் அதிகாரிகள் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
செம்மன் மோட்டை பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பார்வையிடவிடாமல் மறுத்துள்ளதுடன் ஒன்று திரண்டு முறுகல் நிலையினை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்கு சென்ற மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீது பொல்லுகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு வரவளைக்கப்பட்டு நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள் இதன்போது மீனவ சங்கங்களை சேர்ந்த ஏழு அங்கத்தவர்கள் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்னிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் மீனவர்களின் இவ்வாறான தாக்குதல் சம்பவம் குறித்து கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்