சமமான கல்வியை மீண்டும் மீண்டும் கேட்போம், அப்போதும் தரவில்லையெனில் அதனை நம் கையில் எடுத்துக்கொள்வோம் என்று அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சமுத்திரகனி கூறியுள்ளார்.
சென்னை:
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், விஷால், பா.ரஞ்சித், கரு.பழனியப்பன், விஜய்சேதுபது உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி பேசியதாவது:
ஒவ்வொரு முறை 10, 12 வது தேர்வு முடிவுகள் வருகிறது என்றாலே ஒரு பதற்றம் வந்துவிடுகிறது. எத்தனை சகோதர சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ள போகிறார்களோ என்று. தைரிய லட்சுமி ஒரு பாப்பா 6 வருடத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது. 1160 மார்க் வாங்கி. அப்புறம் மணிகண்டன், ரோகித் இப்போ அனிதா.
கூடி கூடி பேசிக் கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்கல. பேசியது போதும் செயலில் இறங்குவோம். என் தம்பி ரஞ்சித் மாதிரி. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரஞ்சித் அங்கங்க சேர்ந்து இருக்காங்க. முதலில் எல்லோருக்கும் சமமான கல்வி வேண்டும். கொடுக்கவில்லையா புறக்கணிப்போம். கேட்போம், தரவில்லை என்றால் புறக்கணிப்போம், மீண்டும் தரவில்லை என்றால் அதனை நம் கையில் எடுத்துக் கொள்வோம்.