காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வுகள் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தநிலையில் குறித்த அமர்வு இடம்பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த அமர்வு ஆரம்பமாகியதும் மண்டபத்திற்குள் உள்நுழைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது தமக்கு அறவே நம்பிக்கையில்லை எனத் தெரிவித்தும், குறித்த அமர்வைக் கைவிடுமாறு வலியுறுத்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் கடும் எதிர்ப்பில் ஈடுபட்ட அவர்களை அங்கிருந்து பொலிஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து வெளியேறி யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஏ-09 பிரதான வீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரியும், காணாமல் போனோருக்கான பணியகத்திற்கெதிராகக் கடும் கண்டணங்களையும் வெளியிட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ” OMP வேண்டாம்..சர்வதேச விசாரணையே வேண்டும்”, “எமது பிள்ளைகள் எங்கே?”, “எமது உறவுகள் எங்கே?”, “எமது உறவினர்கள் உடனடியாக வேண்டும்”, “நட்ட ஈடு வேண்டாம்…உறவுகளே வேண்டும்”, “சிறிலங்கா அரசே ஏமாற்றாதே” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அதோடு போராட்டத்தில் கலந்து கொண்ட சில உறவுகள் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியை குரிப்பிடத்தக்கது.