புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார் ஈழத்தை சேர்ந்த டானியல். தன்னுடைய கடந்த கால நினைவுகள் குறித்து முகப்புத்தகத்தில் அவர் எழுதிவரும் குறிப்பில் சாள்ஸ் அன்ரனியுடன் பள்ளியின் படித்த நினைவுகளை குறித்து எழுதியுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு:
மத்திய வாழ்வின் நீண்ட பயணத்தின் பின்னர் இன்று இந்தப்பதிவுக்காய் எனது கழிந்த வாழ்வின் ஆரம்பத்துக்கு செல்லவேண்டி இருக்கின்றது.
90-91 காலப்பகுதியில் நான் தரம் 5 ல் கற்றுக்கொண்டு இருக்கின்றேன் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள செய்ன்ற் ஜோண்பொஸ்கோ வித்தியாலத்தில் இது இலங்கையின் அதி முக்கியமானதும் மிக பிரபல்யமான பாடசாலையாகவும் திகழ்கின்றது. ஆண்டு 5 வரையிலான வகுப்புகள் மட்டுமே நடாத்தப்பட்டது எழில் கொஞ்சும் இயற்கை அழகால் சூழ்ந்த பாடசாலை எதிர் முனையில் ஒரு குளம் அக்குளத்தை மறைத்து வானைத்தொடும் ஆலமரம் சூரியனை மறைத்தாற்போல் குளக்கட்டை அண்மித்த பகுதியில் கிழக்கே ஒரு இந்துக்கோவில் தெற்கே இரு கத்தோலிக்க ஆலயம் நீண்ட வீதி பல கிளை வீதிகளை கொண்டது சற்று தள்ளிப்போனால் எமது பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதாவது பாலர்பாடசாலை உட்பட ஆண்டு 1-3 வரை நடாத்தப்பட்டது. அதிபர் ஜெரோம் என்ற அருட்ச்சகோதரி அதிபராக கடமையாற்றினார் மிகவும் திறமை மிக்கவரும் அன்பான ஒரு அதிபராக திகழ்ந்தார் எனது வகுப்பாசிரியர் கத்தரினா சிஸ்ரர் மிக மிக கண்டிப்பு நிறைந்த ஒரு அருட்சகோதரி ஆங்கிலப்பாடம் பிரதானமாக கற்பித்தார் இன்றும் கண்டிப்பின் வலியை உணர்கின்றேன்.
அன்று ஒரு திங்கட்கிழமையாக இருந்தது காலை 8.30 மணியளவில் எனது வகுப்புக்கு அதிபர் ஜெறோம் வருகை தந்து இருந்தார் அவரது வலது இடது பக்கங்களில் இரு பிள்ளைகள் ஒன்று பெண் மற்றயது ஒரு ஆண் அதன் நிறை 50-60 கிலோ கிராமாக இருந்து இருக்கும் அவனைப்பார்கவே நான் உட்பட சிலர் குபீர் என சிரித்து விட்டோம் சரியான மாவு நிறம் அந்தப்பெண் அதே நிறம் அழகு அப்படி ஒரு அழகு முன்பற்கள் சில கறுப்பாய் அரித்துக்கிடந்தை கண்டேன் அவளது உதடு கொவ்வைப்பழம் தான் அத்தனை அழகு அதிபர் அவர்களது பெயரை எனக்கு கூறுவதற்கு முன் ஆங்கிலத்தில் கத்தரினா சிஸ்ரருடன் கதைத்தது நினைவு இருக்கின்றது 5-10 நிமிடங்கள் அந்த முக்கியமான சம்பாசனை அதன்பின்னர் டியர் சில்றண்ட்ஸ் எண்டு ஆரம்பித்தார் அதிபர் இது துவாரகா என வலது பக்கம் நின்ற பெண்ணைச்சுட்டிக்காட்டினார் பின்னர் சார்ள்ஸ் என்ற பெயரை கூறி அந்த தடிப்பொடியனை குறிப்பிட்டார் அந்த ரடிப்பயல் எனது மேசையில் அருகருகே சின்ன புன் சிரிப்போடு அந்த வரலாற்று முக்கியமான நட்புப்பயணம் தொடங்கியது.
ஒரு சில வாரங்களின் பின் அந்தப்பெண் துவாரகாவின் வருகை வரவு இடாப்பில் அழைக்கப்படவில்லை அது குறித்து ஆராய்ச்சி செய்யும் வயது அன்று அதுவாக இருக்கவில்லை நாட்கள் மாதமானது சார்ள்ஸ் அவன் பாடசாலை முடிய இரு வெஸ்பா வகை ஸ்கூட்டரில் செல்லுவது நல்ல ஞாபகம் இருக்கின்றது ஒரு பச்சை நிற அரைக்கை சேட் அணிந்த மீசை வைத்த ஒரு மெல்லிய அண்ணே ஏற்றிக்கொண்டு செல்வது நினைவுக்கு வருகின்றது.
அன்று பள்ளிக்கூடம் முடிந்தது அது வெள்ளிக்கிழமையாக இருந்தது மதியம் 3 மணியைத்தாண்டி விட்டது என்னை எனது தகப்பன் அழைத்துச்செல்ல வரவில்லை பசி சொல்லவா வேண்டும் என்னிடம் இருந்த ரூ2.50 முடிந்து விட்டது முன் குளக்கட்டின் அருகே வீதியைக்கடந்து அந்தக்கடையில் பால் கோவா வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்பினேன் இனிப்புப்பாண்டம் வயிற்றை நிரப்பி விட்டது என்னோடு யாருமில்லை தனியாக குளக்கட்டில் சாய்ந்து கொண்டு கீழே கிடந்த கற்களை எடுத்து குளத்தின் அருகுகளில் ஊர்ந்து திரியும் நண்டுகளை குறிபார்த்தேன் சில குறி தவறின திடிரென யாரோ பின்னால் நின்று முதுகை பிடித்ததை உணர்ந்தேன் சிஸ்டர் கத்தரினா பயந்து போனேன் என்னை அறியாமலே அழுது விட்டேன்.
ஏன் அழுகிறீர் யாரும் வரவில்லையா கூட்டிப்போக இல்லை என விம்மி சொன்னது நினைவு இருக்கின்றது சில நிமிடங்களில் என்னை தன்னுடன் அழைத்து கொண்டு விடுதியை நோக்கி நடந்தார் “அப்பாவுக்கு வேலை போல அதுதான் வரவில்லை வருமட்டும் அங்கு நில்லும் அப்பா வந்திடுவேர்” என்று சொன்னார் சரி என்றேன் நானும் அன்றுதான் முதல்தரம் நான் நுழைகின்றேன் கன்னியாஸ்திரிகளின் தங்குமிடம் தயக்கம் தான் வாரும் இங்க என்று அழைத்தார் நிமிர்ந்து
பார்த்தேன் உள்ளே குண்டப்பன் சார்ள்ஸ் வாய்க்குள்ள கேக் வச்சு அடசிக்கண்டு இருந்தான்
அவனுக்கு அருகிகில் நானும் அந்த தட்டில் இருந்த கேக்கை சாப்பிட பணித்தார் கத்தரினா “இருங்கோ ரெண்டு பேரும் ஒரே மேசை கேக்கு முடிஞ்சு போச்சு முழுக்க அந்த குண்டப்பன் திண்டுட்டான் இரண்டு பேரும் ஏதோ சும்மா ஓடித்திரிஞ்ச ஞாபகம் இருக்கு அந்த வளவு நிறைந்த மாமரம் அதைவிட வர்ண நிறமான குரோட்டன் வகை பூச்செடிகள் நேரம் 4.30 ஆகிவிட்டது இரும்புக்கேற் திறந்த சத்தம் காதுகளை வந்தடைந்தது அது எனது அப்பா
ஒடிப்போய் அவரது கால்களைப்பிடித்து செல்லமாக
“அப்பா போங்கப்பா ஏன் கூப்புட வரேல என்று செல்லமாக பொய்க்கோபம் கொண்டேன்
அந்த நேரம் சுஸ்ரர் கத்தரினா வந்து ஆ அன்ரனி வந்துவிட்டீரா என்று கேட்க அப்பா சொன்னார் முக்கியமான மீட்டிங் சிஸ்டர் வேறு யாரையோ ஏற்றும்படி சொன்னவராம் அவர் செய்ய மறந்து விட்டதாக காரணத்தை கூறினார் அப்பாவும் நானும் அங்கிருந்துவிடை பெற்றோம் சார்ள்ஸ் அங்கே நின்றான் விளையாட யாருமில்லாமல் பிரியாவிடை பெற்றேன் அன்றுதான் அவனைக்கண்ட இறுதி நாள் அதுவரை அவன் யார் என்றது எனக்குத்தெரியாது ஏன் என்னொடு படித்த யாருக்குமே தெரியாத உண்மை அப்பாவுடைய சைக்கிளில் தாவி ஏற அப்பா தூக்கி முன்னால் அமர்த்தினார் விடுதியில் நடந்த சம்பவங்களை சிரித்தபடி கூறினேன் கேட்டுக்கொண்டு இருந்த அப்பா சில நிமிடங்களில் சொன்னார் அந்த குண்டப்பன் யார் என்ற உண்மையை அதுதான் பிரபாகரன் எங்கட தேசியத்தலைவர் அவற்ற மகன் அவன்தான் உன்னோட படிக்கின்றான் எனக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை ஆச்சரியப்படுவதற்கான வயதுமில்லை அந்த வெள்ளி மட்டும் தான் சார்லஸ் எனது வகுப்புக்கு வந்தான் பின்னர் தான் கேள்விப்பட்டேன் அவன் பரி ஜோவான் கல்லூருக்கு இடம் மாற்றப்பட்டதாக அவனோடு பழகிய நாட்களை மறக்கமுடியாது.
இன்று ஒரு மாவீரனாகி அமரனாகிவிட்டான் நான் மத்திய கிழக்கில் தொழில் புரியும் போதுதான் செய்தி கேட்டேன் மாவீரன் நண்பன் சார்ள்ஸ் வீரச்சாவு ஆகிவிட்டன் என்று அவன் அழிக்கப்பட்டு விட்டான். அவனது பள்ளி நினைவுகள் எனக்குள் அழியாமல் தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றது 1996 ல் நான் விமானக்குண்டு வீச்சில் காயப்பட்ட வேளை அதிபர் ஜெறோம் அவர்கள் மந்திகை வைத்திய சாலையில் வந்து பார்வையிட்டதை என்னால் மறக்க முடியாது அதே போல் சிஸ்ரர் கத்தரினா இந்த வருடம் தான் இயற்கை எய்தார் என ஒரு பத்திரிகையிக் படித்தேன் கத்தரினா சிஸ்ரரை மன்னாரில் இறுதியாக சந்தித்தேன் எனக்கு கற்பித்த ஆசிரியை ஜெயந்தி அவர்கள் சென் லூசியஸ் மகாவித்தியாலயத்தில் கற்பிப்பதாக அறிந்து கொண்டு அவரையும் சந்தித்தேன் இவ்வாறான நினைவுகளை மீண்டுமொரு முறை நினைத்துப்பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடாக ஏதுண்டு உலகில்?
-டானியல்