சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதன் மூலம் சிங்கள மக்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றியளித்திருப்பதுடன், நோயாளியும் பிழைத்திருப்பதாக சகவாழ்வு மற்றும் தேசிய மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்துவதற்கு முயற்சித்தவர்களின் முகம்களில் கரி பூசப்பட்டுள்ளது. தமிழில் தேசிய கீதம் பாடியமை தமிழர்களுக்கு பெரிதான விடயம் அல்ல. உண்மையில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமையானது சிங்கள மக்களுக்கான உளவியல் சிகிச்சையாகும். இச்சிசிச்சை வெற்றியளித்துள்ளது என்றும் கூறினார்.
நாட்டினுள் காணப்படுகின்ற யுத்தகால சிதைவுகளை புனரமைத்து மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தல் தொடர்பான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
தமது மொழியில் தேசிய கீதம் பாடப்படாதபோது எவ்வாறான உணர்வு இருக்கும் என்பதை பெரும்பான்மை மக்கள், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது உணர்ந்துள்ளனர். தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் இது தொடர்பில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
தமது ஒருவரை பிரதமராக்குவது அவர் தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சியினர் செயற்படுவது தவறானதல்ல. அதற்காக இனவாதத்தை, மதவாதத்தை, மொழிவாதத்தை, தீவிரவாதத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் கூறினார்.
கடந்த காலத்தில் சுய இராச்சிய கோரிக்கையை முன்வைத்து தமக்கென தனியான கீதம், கொடி என்பவற்றை அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தமிழ் மக்கள் இதனைப் புறக்கணித்துவிட்டு சகலரையும் ஒன்றாக்கக் கூடிய தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது பாராட்டத்ததக்கது. இந்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்ப்பவர்களே உண்மையான பிரிவினைவாதிகள். இனவாதத்தை தட்டி வளர்ப்பதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாதைகள், கட்டடங்கள், பாலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற உட்கட்டுமானங்களை மாத்திரம் கட்டியெழுப்புவதால் பலன் கிடைக்காது. இவற்றுடன் மக்களுக்கிடையில் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும். பல்லின சமூக, பல்மொழி, பல்சமய சமூகமொன்றை கட்டியெழுப்பி சகவாழ்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ள. இந்த நடவடிக்கைகள் மெதுவானதாக இருந்தாலும் நிச்சயமாக அரசு இந்நடவடிக்கையை தெளிவாக முன்னெடுக்கும்.
இராணுவத்தினரால் பெறப்பட்ட யுத்த வெற்றியை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவது ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றுமொரு தரப்பினருக்கு கண்ணீரையும், தாம் பட்ட துயரங்களையும் மீளவும் ஞாபகப்படுத்துவதாக அமையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட பின்னர் நான் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். அடுத்த சுதந்திர தினத்தில் 9 மாகாணங்களின் கலாசார நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின நிகழ்வில் உள்ளடக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கையர் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பிரதமர் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைத்துள்ளார். இந்த உபகுழுவிலேயே தேசிய கீதம் தமிழில் பாடவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம். எல்லோரும் ஒன்றாக சேர்ந்தா்தான் உண்மையான இலங்கையர் என்ற தேசிய அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும்.
புதிய தலைமுறையினர் புதிதாக சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். எங்கே தவறுவிட்டோம் என்பதை தேடிப்பார்த்து தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.