சிறிலங்கா இராணுவத் தளபதியைப் பாராட்டுகிறார் மகிந்த!

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நாட்டு மக்கள் பாராட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக, முன்னாள் இராணுவத் தளபதிகள், சிறிலங்கா இராணுவத்தின் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச,

“முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயசூரிய மீது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள வேளையில், பாதுகாப்புப் படைகளின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்று தற்போதைய இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நாட்டு மக்கள் பாராட்ட வேண்டும்.

போர்க்குற்றங்களுக்கு ஜெனரல் ஜயசூரியவே பொறுப்பு என்று கூறிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடளாவிய ரீதியில், கூட்டு எதிரணி பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் அவதூறான கருத்துக்கள் படையினரை வெறுப்படையச் செய்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதிபாராட்டுமகிந்தமகேஸ் சேனநாயக்கவை
Comments (0)
Add Comment