சுதந்திர தின கொண்டாட்டங்களில் பொது மக்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையொட்டி டெல்லியில் வரும் 15–ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவுக்கு பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முக்கிய பிரமுகர்கள், பள்ளிக் குழந்தைகளே அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பொது மக்கள் குறைவாகத்தான் பங்கேற்பார்கள். இந்த நிலையை மாற்றி இந்த தடவை டெல்லி செங்கோட்டையில் சுமார் 10 ஆயிரம் பொது மக்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லி செங்கோட்டையின் வலது பக்கத்தில் 10 ஆயிரம் பொது மக்கள் அமர இருக்கை போடப்படுகிறது. அவர்களுக்கு அருகில் தேசியக்கொடியை அசைத்தப்படி சுமார் 10 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து இருப்பார்கள்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செங்கோட்டைக்கு அன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது தவிர டெல்லி போக்குவரத்து கழகத்தின் பஸ்களும் வழக்கம் போல வந்து செல்லும்.
சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள், மாணவ–மாணவிகள் அனைவரும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பொது மக்கள் மொபைல் போன், காமிராக்கள், பைனாகுலர், கைப்பைகள், சூட்கேசுகள், சிகரெட் லைட்டர்கள், டிரான்சிஸ்டர்கள், டிபன் பாக்சுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஏற்பாட்டால் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்பதால், அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.