இலங்கை விவகாரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சுப்பிரமணியன் சுவாமியை பாஜக உயர்மட்டத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே ஜி.கே வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். அவரைக் கட்சி மேலிடம் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக் கடலில் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என தான் இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கியிருந்ததாக கூறியிருந்தார்.
கைது செய்யும் மீனவர்களை விடுவிக்கும் படி தான் கோரியதாகவும் மீனவர்கள் தொழிலாளர்கள் என்றும் படகு உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்றும் தான் இவ்வாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது