சுமார் ரூ.5,400 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு: அருண் ஜேட்லி

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சுமார் ரூ.5,400 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து அருண் ஜேட்லி கூறியதாவது:
ஊழல், கருப்புப் பணம், கள்ளநோட்டுகள், பயங்கரவாதத்துக்கு செல்லும் நிதி ஆகியவற்றை ஒழிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த நோக்கத்துக்காகவே, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணம் வெள்ளையாக மாறுவதைத் தடுப்பதற்காகவும், கணக்கில் காட்டப்படாத வருமானத்தைக் கண்டறிவதற்காகவும் நாடு முழுவதும் கடந்த மாதம் 10-ஆம் தேதி வரை 1,100-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தச் சோதனைகளில் ரூ.610 கோடி மதிப்பிலான சொத்துகளும், ரூ.513 கோடி மதிப்பிலான ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.110 கோடி மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளும் அடங்கும். மேலும், சுமார் ரூ.5,400 கோடி மதிப்பிலான கருப்புப் பணமும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விவகாரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இதுதவிர, அதிக அளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 5,100 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
156 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, கருப்புப் பணத்தை சட்டப்பூர்வமாக மாற்றும் முயற்சிகளுக்கு சில வங்கி அதிகாரிகள் உறுதுணையாக இருந்தது தெரியவந்தது. இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 156 மூத்த அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 41 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார் அருண் ஜேட்லி.

அருண் ஜேட்லிகருப்புப் பணம்மக்களவைரூபாய் நோட்டுவாபஸ்
Comments (0)
Add Comment