சென்னை மெரினா கடற்கரையில் மாற்றம்-மாணவர் இளையோர் இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அணிவகுப்பு மரியாதையோடு மலரஞ்சலி செலுத்தினர்.
சிங்கள பேரினவாத அரசின் இன அழிப்பில் உயிரிழந்த தமிழ்ச் சொந்தங்களை நினைவேந்தி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவல்ல விடுதலை போராட்டத்தின் தொடக்கமே என்று மெரினாவில் மாற்றம்- மாணவர் இளையோர் இயக்கம் சார்பில் மாணவர்களும் இளைஞர்களும் அணிவகுத்துச் சென்று உலகிற்கு எதிரொலித்துள்ளனர்.
ஆறு ஆண்டு காலம் அல்ல அறுபது ஆண்டு காலம் சென்றாலும் ரணங்களும் வலிகளும் இன்றும் ஆற போவதுமில்லை , மாற போவதுமில்லை என்று ஒவ்வொரு ஆண்டும் உலகிற்கு நினைவுப்படுத்தும் தெரியப்படுத்தும் விதமாகவே மே 17 ஆம் நாள் தமிழ் உணர்வாளார்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்று கூடுகின்றோம், இன்றும் ஒன்று கூடியுள்ளோம். சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு திருவள்ளுவர் சிலையின் அருகே முடிவடைந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிக்கவிஞர். காசி ஆனந்தன் உட்பட பலரும் கலந்துக்கொண்டு இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு மலர்வளையும் வைத்து மரியாதை செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் மூலம் சிங்கள பேரினவாத அரசின் இனவழிப்பிற்கு தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு என்று உலகிற்கு வலியுறுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.