தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு நியமனம் செய்வதில் பல தவறுகள் நடைபெறுவதாக தொடர்ந்து ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் 112 உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கும், 178 இணைப் பேராசிரியர் பணி இடங்களுக்கும், 102 பேராசிரியர் பணி இடங்களுக்கும் நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் செய்ய அண்ணா பல்கலைக் கழகம் விளம்பரம் செய்தது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31.7.2015 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் 11.7.2015 அன்றைய நிலையில் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டுமென்றும்; உதவிப் பேராசிரியர் பணி இடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் எம்.இ. முதுநிலை பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு எம்.இ. படிப்பு முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் இவர்களில் பெரும்பாலானோரின் விண்ணப்பங்களை பல்கலைக் கழகம் முதலில் நிராகரித்துவிட்டது. இதில் எம்.இ. படிப்பில் பல்கலைக் கழக அளவில் முதல் இடம் பெற்றவர்களின் விண்ணப்பங்களும் நிரா கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிராகரிப்பு பற்றி நாளிதழ் ஒன்று பெரிதாகச் செய்தி வெளியிட்ட பிறகு, அண்ணா பல்கலைக் கழகம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறது. கடந்த 18-ம் தேதி திடீரென்று ஓர் அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டது. அதில் 23.1.2016 அன்று காலையில் கட்டிடவியல் பிரிவுக்கும், 24-ம் தேதி காலையில் மின்னணு தகவல் தொடர்பியல், பிற்பகலில் மின்சாரம், மின்னணுவியல் பிரிவுகளுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விடைத்தாள்கள் உடனுக்குடன் திருத்தப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
விண்ணப்ப தேதி முடிந்து ஆறு மாதங்கள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, தற்போது திடீரென்று அவசர அவசரமாக எழுத்துத் தேர்வினையும், நேர்காணலையும் இவ்வளவு குறைந்த நாட்களிலேயே நடத்தப்போவதாக இணைய தளத்தின் மூலமாக அறிவித்திருப்பதில் இருந்தே இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடத்த முடிவு செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அண்ணா பல்கலைக் கழகம் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ள எந்த பிரச்சினைக்கும் உரிய தீர்வு காணாமல் அவசர அவசரமாக எழுத்துத் தேர்வினை 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடத்துவதாக 18.1.2016 அன்று அறிவித்து விட்டு பின்னர் அனைத்து எழுத்துத் தேர்வுகளும், 24.1.2016 அன்று நடைபெறும் என்றும், அன்று மாலையிலேயே எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கான ஆணை நேரடியாக பல்கலைக்கழகத்திலேயே வழங்கவும் முடிவு செய்து 22.1.2016 அன்று அறிவித்திருக்கிறார்கள்.
ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொள்ளும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, முடிவும் அன்றே அறிவிக்கப்பட்டு, நேர்முகத் தேர்விற்கான ஆணைகள் அப்போதே பல்கலைக் கழக வளாகத்திலேயே நேரடியாக வழங்கப்படும் என்பது ஊழல் முறைகேடுகளை சப்தமில்லாமல் நடத்துவதற்காகவே என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வுகளுமே சடங்குக்காக மட்டுமே அல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு நேர்மையாக நடத்தப்படுபவை அல்ல என்று பலரும் எண்ணுவதை அடிப்படை ஆதாரமற்றது என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. இந்தத் தேர்வுகளை அவசரம் காட்டாமல் ஒரு சில நாட்கள் தள்ளி வைத்து முறையாக தேவையான நாட்கள் அவகாசம் கொடுத்து எதிலும் ஒளிவுமறைவின்றி நடத்துவது தான் நியாயமாக இருக்கும். அத்துடன், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எவ்வித ஊனமும் ஏற்பட்டு விடாமல், காலிப்பணி இடங்களைச் சரியாகக் கணக்கிட்டு அறிவிக்கை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.