சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஐஐடி விளக்கம் அளித்துள்ள நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பினர் ஐஐடியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்ப்பட்டது. இந்நிலையில் காலை 11 மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்று வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.