சென்னை நகரில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற சென்னை நகர போலீசார் ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் அல்லல்படும் நிலைமை உள்ளது. சென்னை நகரில் வருமானத்திற்காக திருநங்கைகள் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்படும் நிலை உள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஒரு சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்துள்ளார்.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடிய திட்டங்களை சென்னை நகர போலீசார் விரைவில் செயல்படுத்த உள்ளனர். படித்த திருநங்கைகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுக்கவும், படிக்காத திருநங்கைகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் சொந்தமாக தொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்வது தான் அந்த சிறப்பு திட்டமாகும். இதற்காக திருநங்கைகளின் சங்கங்களை சேர்ந்தவர்களை அழைத்து சென்னை நகர போலீசார் பேசிவருகிறார்கள்.
விரைவில் சென்னையில் திருநங்கைகளின் வாழ்வாதார சிறப்பு முகாம் சென்னை நகர போலீசாரால் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் செய்துவருகிறார்கள்.