சேலம் மாவட்டத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு, இந்திராகாந்தி மற்றும் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு சேலம் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழ்நாட்டில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. புதிய ரேசன் கார்டுக்கு ரூ.1000 வாங்குவதாக மேடையில் ஒருவர் பேசினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் புதிய ரேசன் கார்டுக்கு ரூ.5000 வாங்குவதாக கூறுகிறார். அதுபோல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், ஆசிரியர்களும் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது, இப்பவும் நாங்கள் தினக்கூலியாக வேலை செய்து வருவதாகவும், எங்களுக்கு பணிநிரந்தர வாய்ப்பு கொடுக்காமல் புதிதாக ஆட்களை நியமனம் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

அதற்கு ரூ.6 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகத்தில் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். எந்த துறையில் ஊழல் இல்லையென்று ஆட்சியாளர்கள் சொல்ல முடியுமா? அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. ஊழலுக்கும், லஞ்சத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதிர்த்து போராடும். மக்கள் பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெருவில் இறங்கி போராடும் காலம் வந்து விட்டது. மக்களுக்கு நல்லது செய்வார் என்று ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதாவை மக்கள் அமர்த்தினார்கள்.

ஆனால் மக்களுக்கு அவர் நல்லது எதுவும் செய்யாமல் துரோகம் செய்துவிட்டார். ராஜாஜி காலத்தில் தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் சேலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அதேபோல் சேலம் இரும்பாலை கொண்டு வந்தது, மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது ஆகியவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நடந்தது என்பதை யாரும் மறந்து விட முடியாது. காமராஜர் படிப்பதற்காக பள்ளிக்கூடங்களை திறந்து வைத்தார்.

ஆனால் வீதிக்கு வீதி சாராயக்கடைகளை திறந்து வைத்ததுதான் தமிழக அரசின் சாதனை ஆகும். கிராமங்களில் மதுவுக்கு அடிமையாகி, கணவரை இழந்து தவிக்கும் இளம் விதவைகள் அதிகமாக காணப்படுகிறார்கள். மது விலக்கு அமுல்படுத்தினால் அரசுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். தீய வழியில் வரும் பணத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை. சென்னை மழை வெள்ளத்தில் வீடு உடமைகளை இழந்து பரிதவித்த மக்களுக்கு நேரில் சென்று முதல்வர் ஆறுதல் கூறவில்லை. ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், ஏன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூட பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஆனால் ஜெயலலிதாவோ, பொங்கலுக்கு பரிசு தருகிறேன் என்று கூறினார். நல்லதை செய்வார் என்று மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது எனபதால் அவரை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் ஆதரிக்கும் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். தமிழகத்தில் நல்லதொரு எதிர்காலம் வரும். சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் ஓசுமணி, ஆத்தூர் நகரத் தலைவர் முருகேசன், கிழக்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு பொறுப்பாளர் அசோக்குமார், மாநகர எஸ்.சி., எஸ்.டி., பொறுப்பாளர் தும்பல் பாஸ்கரன், கொண்டப்ப நாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரகுபதி, பொதுச்செயலாளர் வசந்தம் எல்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திராகாந்திகாங்கிரஸ் கட்சிகோட்டைசேலம்சோனியாகாந்திநேருபிரதமர்பிறந்தநாள்பொதுக்கூட்டம்மாவட்டமுப்பெரும்மைதானம்விழா
Comments (0)
Add Comment