இதற்குமுன் டெல்லியில் ப.சிதம்பரம் ’இந்த விவகாரம் கர்நாடக அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. அந்த மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்றோ, நாளையோ கூடி, இது தொடர்பாக முடிவு செய்யும்’ என தெரிவித்த அவர், இதுதொடர்பாக மேற்கொண்டு ஏதும் கூறுவதற்கில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மந்திரிசபை இன்று மாலை கூடியது. ஆனால் இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக சட்ட மந்திரி ஜெயசந்திரா, ’இது தொடர்பாக அட்வகேட் ஜெனரல், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆகியோரிடம் சில விளக்கங்களை கேட்டிருந்தேன். அட்வகேட் ஜெனரல் வெளியூர் சென்றிருப்பதால் அந்த விளக்கங்களை அளிக்க அவரால் இயலவில்லை. எனவே, இன்றைய கூட்டத்தின்போது ஜெயலலிதா விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்னதாகவே இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.