தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் 3,771 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் வாக்குப்பதிவிற்காக 9,784 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மின்னணு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வேட்பாளர் புகைப்படம், பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் பொருத்தப்பட்டன.
சைதாப்பேட்டை தொகுதிக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நந்தனம் கலைக்கல்லூரியில் வைத்தும், வேளச்சேரி தொகுதிக்கு உரிய வாக்குப்பதிவு எந்திரங்களில் திருவான்மியூர் பாரதிதாசன் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைத்தும் வேட்பாளர் புகைப்படம், பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. இதேபோன்று வில்லிவாக்கம் தொகுதிக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஐ.சி.எப். மேனிலை பள்ளியில் வைத்தும் வேட்பாளர் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தப்பட்டன.
இதேபோன்று பிற தொகுதிகளிலும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. வேட்பாளர் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தப்பட்ட எந்திரங்கள் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. வருகிற 15-ந் தேதி பிற்பகல் முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படும். அதுவரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பாளர் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தி ‘சீல்’ வைக்கப்பட உள்ளது.