ஜனாதிபதி செயலகத்துக்கு முன் குழப்பத்தை ஏற்படுத்தியது மகிந்தவே!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக குழப்பத்தை தோற்றுவித்த போரின்போது அவையவங்களை இழந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களுக்குப் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களே சதி செய்திருப்பதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகோர்த்திருக்கும் சில பௌத்த பிக்குமார்களும் இந்த கூட்டு சதிக்கு உடந்தை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவையவங்களை இழந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்கள் அண்மையில் தொடர் போராட்டத்தை அடுத்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூச்சலிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

குழப்பகரமான நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் மாலை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது,

இதன்போது உரையாற்றிய இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, அவையவங்களை இழந்த ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் மீதான பொலிஸாரின் நடவடிக்கை குறித்து தமது கவலையை தெரிவித்துக்கொண்டார்.

எனினும் முன்னாள் இராணுவச் சிப்பாய்களின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுடன் இணைந்திருக்கும் கடும்போக்கு பௌத்த பிக்குகளுமே சதிசெய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஓய்வூதியக் கொடுப்பனவுக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அடுத்த நொடியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புறம்பாக வந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சூழ்ச்சி மேற்கொள்வோர், அவையவங்களை இழந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்குப் பதிலாக வேறொரு தரப்பினரை அனுப்பி கலகத்தை ஏற்படுத்தியிருந்ததாக அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறினார்.

இராணுவச்சிப்பாய்கள்ஊடகவியலாளர்கள்குழப்பம்ஜனாதிபதி செயலகம்மகிந்த
Comments (0)
Add Comment