ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும்போது தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ஒரு பக்கம் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் இன்னொரு பக்கம் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்களும் முன்மொழியப்படுவதாக தெரிவித்துள்ள அவர், சரியான தேர்வு மக்களிடத்தில் உள்ளதாக கூறினார்.
மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) மாதிரிக் கிராமங்கள் திறந்துவைக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஏழைகளுக்கு செயலாற்றக் கூடியவராக மக்களுக்கு வீட்டுத் திட்டங்களைத் தந்து மக்களின் மனங்களில் உள்ள சஜித் பிரமதாச இருக்கின்றார் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அறிவிக்கப்படுகின்ற போது எங்கள் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள் என்றார்.
இதனிடையே, தோட்டவெளி கிராமத்தில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் வீடுகள் தேவையானவர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்க முன்வர வேண்டும் என சஜித்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.