ஜம்மு- காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் உதவியிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
ஜம்மு- காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் வீரர்கள் 11 பேரும், பொதுமக்கள் இருவரும் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த உணவுப் பொட்டல பைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இந்தவகை உணவுப்பொட்டலங்களையே பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துவதாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் இன்று ஆய்வு செய்கிறார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு ராணுவத் தளபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய யூரி, ஸ்ரீநகர், ஷோபியான், ட்ரால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் உறுதியுடன் இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது