ஜல்லிக்கட்டுக்கான போட்டிகளை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கிடைத்ததையடுத்து போட்டிகளை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு பேர் போன இடங்களில் நடைபெற்று வரும் ஆயத்தங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்குட்பட்டே போட்டிகள் நடைபெறும் என்றும், காளைகள் மற்றும் காளையர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, திருச்சி மாவட்டம் சூரியூரிலும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் ஆயத்தப் பணிகளில் ஏராளமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் வேகமாக தயாராகி வரும் நிலையில், போட்டியின் ஹீரோக்களான காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க காத்திருக்கும் காளையர்களும் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல அமைப்பான PETA ஆகியவை தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளன. இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரிக்க விலங்கு நல அமைப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்களை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காட்சிக்கு உட்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அனுமதிஜல்லிக்கட்டுதமிழகம்தீர்ப்புதீவிரம்நீதிமன்றம்போட்டிவிசாரணை
Comments (0)
Add Comment