ஜல்லிக்கட்டு தொடர்பில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நல்ல தீர்ப்பு வரும்!

ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.தமிழர்களின் வீர விளையாட்டு, ஜல்லிக்கட்டு.

ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.

குறிப்பாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறபோது காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டும், போட்டிகளை நடத்துவதற்கு முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளை பரிசோதிக்க வேண்டும், அவற்றுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும், பிராணிகள் வதைக்கு எதிரான மாவட்ட கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நல வாரியமும் கண்காணிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

ஆனாலும் அந்த அறிவிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு வழக்கு தொடுத்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’வுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதுபற்றி டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முன்னாள் மந்திரியும், தற்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகரிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

ஜல்லிக்கட்டைப் பொறுத்தமட்டில், நான் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்தபோது, நாங்கள் அறிவிக்கை வெளியிட்டோம். அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விடவில்லை.

ஆனால் அந்த அறிவிக்கையை செயல்படுத்துவதற்குத்தான் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறபோது, மத்திய அரசின் அறிவிக்கையானது சட்டத்தின் பரிசீலனையில் நிலைத்து நின்று, செல்லுபடியாகும், நல்ல தீர்ப்பு வரும் என உறுதியாக சொல்கிறேன்.

நான் மிகவும் உறுதியாக சொல்வதற்கு காரணம், அந்த அறிவிக்கையில் காளைகளின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரியம் காக்கப்படுகிற வகையில் அந்த விளையாட்டுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. அது ஒரு சீரான அறிவிக்கையாகும். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உச்சநீதிமன்றம்காளைகள்ஜல்லிக்கட்டுபோராட்டம்மந்திரிவிளையாட்டு
Comments (0)
Add Comment