ஆளும் கட்சி அமைச்சர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அடித்து விரட்டுகிறார்கள். ஒருவேளை ஜெயலலிதாவே ஆர்.கே. நகருக்கு போனாலும் விடுவார்களோ இல்லையா என்று தெரியவில்லை என்று திமுக பொருளாளர் மு.கா. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள முத்துரங்கம் சாலையில், கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கனிமொழி அவர்களை ஆதரித்து தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம்: கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்த தி.நகர் தொகுதி மக்கள்தான். குறிப்பாக முத்துரங்கன் சாலையில் உள்ள மக்கள் வெளி வர முடியாமல் தவித்தனர். அப்படி பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா வந்து பார்த்தாரா ? அவருடைய சொந்த தொகுதியான ஆர்.கே. நகருக்கு மட்டுமே சென்றாலும் வேன் கண்ணாடியை கூட திறக்காமல், “வாக்காள பெருமக்களே” என்று தேர்தல் பிரச்சாரம் செய்வது போல பேசிவிட்டு சென்றார்.
இப்போது ஆளும் கட்சி அமைச்சர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அடித்து விரட்டுகிறார்கள். ஒருவேளை ஜெயலலிதாவே ஆர்.கே. நகருக்கு போனாலும் விடுவார்களோ இல்லையா என்று தெரியவில்லை. காரணம் எந்த முதல்வரும் தராத மோசமான நிர்வாகத்தை ஜெயலலிதா நடத்தினார்.
அதிமுக ஆட்சியில்…
– சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது.
– வியாபார நிறுவனங்களை மிரட்டி அதிமுகவினர் வசூல் செய்யும் கொடுமை இந்த தொகுதியில் நடக்கிறது.
– சிறிய கடைகளில் வசூலை கவுன்சிலர்களும், பெரிய கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் என வசூல் வேட்டை கொள்ளை அடிக்கும் ஆட்சியாக நடக்கிறது.
– நடைப்பாதை வியாபாரிகள் கூட நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை.
– குடியிருப்பு வாசிகளும் கூட இதிலிருந்து தப்பவில்லை. அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதில்லை.
– இந்த பகுதியில் ரேஷன் கடைகள் முறையாக இயங்குவதில்லை. பொருட்களே வழங்கப்படுவதில்லை.
– ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டமும் ஊழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை மாநகராட்சி என்று இருக்கிறதா ? மேயர் என்று ஒருவர் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
நானும் சென்னையின் மேயராக 2 முறை இருந்திருக்கிறேன். திமுக சார்பில் மா.சுப்பிரமணியனும் மேயராக இருந்திருக்கிறார். நாங்கள் பொறுப்பில் இருந்தபோது இந்த பகுதிக்கு எத்தனை முறை வந்திருப்போம். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறோம். என்னென்ன பணிகளை ஆற்றினோம் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். சமீபத்தில் மழை வந்தபோது வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டது. அது இயற்கை பேரிடர் அல்ல. செயற்கை பேரிடர்.
ஏனென்றால், மழை வரும் காலங்களில் ஒரு முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும் ? ஒருவார காலத்திற்கு முன்பாகவே இந்தளவுக்கு மழை பெய்யும், வெள்ளம் வரக்கூடும், எனவே முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்” என்று மத்திய அரசும், வானிலை மையமும் எச்சரிக்கை செய்கின்றன. அந்த நிலையில் முதலமைச்சராக இருப்பவர் அமைச்சர்களை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளை, மாநகராட்சி அதிகாரிகளை எல்லாம் அழைத்து ஆலோசனை செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆனால் எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை முறையில்லாமல் திறந்ததால் 15 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டீர்கள், அப்போது திமுக செய்த நிவாரணப் பணிகளையும் அறிவீர்கள். அதேபோல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரணத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ வரவில்லை. அதைப் பற்றி கவலை கூடப்படவில்லை. 5000 ரூபாய் நிவாரணத் தொகையை கூட அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் கொடுத்தார்கள்.
சென்னையை பொறுத்தவரை இதுவரை பாதிக்கப்பட்ட 60% மக்களுக்கு மட்டும்தான் நிவாரண உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே தலைவர் கருணாநிதியிடம் இதுகுறித்து தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிவாரண உதவி கிடைக்காதவர்களின் பட்டியலை கண்டறிந்து அவர்களுக்கு முதலில் அந்த தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம். அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல மாநகராட்சி என்ற ஒன்றின் சார்பில் எந்த பணியும் நடைபெறுவதாகவே தெரியவில்லை.
நான் மேயராக இருந்தபோது எதிர்கட்சியின் கவுன்சிலர்களை அதிகம் பேச அனுமதித்து, அவர்களது கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு மாநகராட்சி கூடுகிறது, ஜெயலலிதா புகழ் பாடுவது, அப்படி பாடாதவர்களை அடித்து தூக்கி கொண்டு வந்து வெளியில் போடுவது என்ற நிலையில் தான் நடக்கிறது. எனவே மக்களின் வளர்ச்சி பணிகள் அனைத்தும் நிறைவேற கழக வேட்பாளர் டாக்டர் கனிமொழி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் என்று கூறினார்.