ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது அல்ல: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுக்கோட்டையில்  நடைபெற்ற அக்கட்சியின் பேரவைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல் முறையீடு செய்ய வேண்டுமென தீர்ப்பு வெளியான நேரத்தில் நாங்கள் தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் தெரிவித்ததைப் போலவே கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது. எனவே, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில்  ஊழல் எதிர்ப்பு என்ற அரசியலை முன்வைத்து நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை நாங்கள் ஆதரித்து களத்தில் நிற்கிறோம். முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டதால்தான் பிறரைப் போல அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆட்சியிலாவது 2, 3 ஆண்டுகளில் முறைகேடு வெளிவந்தது. மத்தியில் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்த பாஜக ஊழல், முறைகேடு இல்லாத ஆட்சி நடத்தியதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால், ஐபிஎல்- கிரிக்கெட்டில் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த பொருளாதாரக் குற்றவாளி லலித் மோடிக்கு உதவி செய்த முறைகேடு வெளிவந்துள்ளது. இதனால், பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இவ்விஷயத்தில் வேறுபாடில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் கூட்டுக்குழுவின் பரிந்துரையில் உள்ள போதே மூன்றாவது முறையாக நிலமெடுப்பு அவசரச்சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேக்கோதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக அனுமதி எதையும் கேட்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளதைப்பார்த்தால், கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதை உணரமுடியும்.  காவிரி மேலாண்மை வாரியம், நீர் மேலாண்மைக்குழு காவிரி ஆற்றில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தடுக்கமுடியும்.

ஜெயலலிதா முதல்வராக இல்லாத காலங்களில் அரசு இயந்திரம் முடங்கிப்போனதால், சட்டம், ஒழுங்கின்மையால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூலிப்படை நடவடிக்கைகள் அதிகரித்தன.  குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஆண்டில் ஜாதி மோதல், மணல் திருட்டு போன்ற காரணங்களால் சுமார் 100 கொலைகள் நடந்துள்ளன. இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலுக்காக அமைச்சர்கள் அனைவருமே அங்கு பணியாற்றுவதால் மக்கள் நடவடிக்கைகள் மீண்டும் முடங்கிப்போயுள்ளன.

இந்நிலையில் பொருளாதார கொள்கை, வகுப்பு வாத நடவடிக்கைகள், தீண்டாமை கொடுமை, ஊழல் ஒழிப்பு, யோகா, ரயில்வேத்துறை தனியார் மயம், முக்கிய பதவிகளில் ஆர்எஸ்எஸ்- ஆட்களை நியமிப்பது,  வகுப்பு மோதல்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் அமைச்சர்களை அமர்த்துவது போன்ற விஷயங்களில் பாஜக அரசு மிகவும்  தந்திரமாகச் செயல்படுகிறது.

டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும்போது பயன்படுத்தப்படும் வேளாண் இயந்திரங்களுக்கு அரசு மானியம் கொடுப்பதைத் தவிர்த்து, அந்த மானியத்தை விவசாயிகளிடமும், விவசாயத்தொழிலாளர்களிடமும் நேரடியாக வழங்க வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன். இதில், மாவட்டச்செயலர் எஸ். கவிவர்மன், மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னத்துரை,  ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஊழல்சொத்துக்குவிப்பு வழக்குஜி.ராமகிருஷ்ணன்ஜெயலலிதாதீர்ப்புபாஜக அரசுவகுப்பு மோதல்
Comments (0)
Add Comment