ஜெயாவை கிண்டலடித்து பாடும் ஸ்டாலின்

தி,மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ”முதலமைச்சர் ஜெயலலிதாவை கிண்டல் செய்யும் பாடல்களை பாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதால், அவரும் உற்சாகத்துடன் பாடல்களை பாடியபடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் விவரம் வருமாறு:– கடந்த 5 ஆண்டுகளில் இந்த கொங்கு மண்டலத்திற்கு ஏதாவது ஒரு நன்மையை செய்து இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை. அமைச்சரின் தம்பி தங்கராஜின் மீது நில அபகரிப்பு வழக்கு கொடுக்கப்பட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. ஆனால் அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்த கொடுமைகளும் நடந்தது. அதனால்தான் இன்றைக்கு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எந்த தொகுதியிலும் வாக்கு கேட்டு செல்ல முடியாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் சுய கவுரவத்துடன் தலை நிமிர்ந்து வாழக் கூடிய நிலையை தலைவர் கலைஞர் உருவாக்கி இருக்கிறார். ஆனால் ஜெயலலிதா அங்கு மாட மாளிகை போல மேடையமைத்து அதில் சுயமரியாதையை சீரழிக்கும் நிலையில் உங்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் காட்சியை நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இந்த நிமிடம் வரை வெளியிடப்படவில்லை. இரண்டு நாட்களில் வெளியிடப்போவதாக தகவல் வந்திருக்கிறது. அதை வெளியிட்டாலும், வெளியிடவில்லை என்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஏனென்றால் அவர்கள் இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது நமக்கும் தெரியும், இந்த நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும்.

ஆக, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியானவுடனே அவர்களுக்கு ஜன்னி வந்து விட்டது. அச்சத்துடன், பயத்துடன் இருக்கிறார்கள். ஆர்.கே. நகர் உட்பட 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கும் நிலை உருவாகி விட்டது. அதனால் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிட்டு, அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, அதுவும் அந்த குழு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தலைமையிலேயே அமைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம், காரணம் அவர்களுடைய உளவுத் துறையை கண்காணிக்க நாம் ஒரு உளவுத்துறை வைத்திருக்கிறோம். ஆக, ஏற்கனவே 2011–ல் பேன், மிக்சி, கிரைண்டர் கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து, ஓட்டை உடைசல்களாக கொடுத்தார்களே, அதெல்லாம் இப்போது யாருக்காவது பயன்படுகிறதா என்று கேட்டால் இல்லை.

இப்போது அவையெல்லாம் காயலான் கடைகளுக்கு போய் விட்டன. 2011 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா சொன்ன எதையும் செய்யவில்லை. 2014 பாராளுமன்றத் தேர்தலில் 37 எம்.பி.க்களை தமிழ் நாட்டு மக்கள் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பினார்கள். அப்போது கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அந்த எம்.பி.க்களால் ஏதாவது நன்மை ஏற்பட்டதா என்றால் அதுவும் கிடையாது.

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது, சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததும் தான் அவர் சொல்லாமலே செய்தவை. “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து”, என்ற பாட்டு போல, “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே, ஜெயா சொன்னதும் பொய்யே பொய்யே”, என்ற பாட்டிற்கு ஏற்ப, ”இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சத்தியம் தவறாத உத்தமி போலவே நடிக்கிறார், நல்ல சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்”, ஆக, இப்படி பல பாடல்களுக்கு அடையாளமாக இருக்கக் கூடிய ஜெயலலிதாவின் இந்த கொடுமையான ஆட்சியை அகற்ற தி.மு.க.விற்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு தாருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கிண்டல்ஜெயலலிதாதிமுகபாடல்பொருளாளர்முக.ஸ்டாலின்
Comments (0)
Add Comment