சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வதில் நேற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதமும் விதித்தது. அதைத் தொடர்ந்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சந்திரசேகரா உத்தரவிட்டார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்.27ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன் என்று தீர்ப்பளித்தார். இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அதிமுக வக்கீல்கள் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளையும் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு யாரை நியமிப்பது, ஜாமீன் மனு தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து ஆலோசனையை பெறுவது போன்ற வேலைகளால் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் ஜெயலலிதாவை சிறையில் நேற்று சந்தித்துப் பேசினர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அதிமுக வக்கீல்கள் முடிவு செய்தனர்.
இதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களுடன் மூத்த வக்கீல் பி.குமார், வக்கீல் மணிசங்கர் ஆகியோர் நேற்று மாலை புது டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யஉள்ளனர். ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் அனில் தவான் அல்லது ஹரீஸ் சால்வே ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகம் என்றும் அதிமுக வக்கீல்கள் தரப்பில் கூறப்படுகிறது.