ஜெயின் வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். 1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டு காலம் நடைபெற்றது. இதில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியன்று பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதியன்று இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அத்துடன் டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மேல்முறையீட்டு மனுவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தது.

அதன் பின்னர், கடந்த 18 ஆம் தேதியன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை சிறப்பு அமர்வு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாள்தோறும் விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் இம்மனுவை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான இடைக்கால நிபந்தனை ஜாமீனை ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமியை நியமித்து கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா உத்தரவிட்டுள்ளார். நீதிபதி குமாரசாமி, கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

இதைத் தொடர்ந்து, குளிர்கால விடுமுறை முடிந்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுவதால் இன்று முதல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இளவரசிகுவிப்புகோடிசசிகலாசுதாகரன்சொத்துஜெயலலிதாதமிழகம்தொடர்ந்துநடைபெறும்நீதிபதிமுதல்வர்வழக்கு
Comments (0)
Add Comment