தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆஜராக தடை விதிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி, ஏற்கனவே வாதங்களை முடித்து இருக்கிறார். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பி.ரத்தினம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதை நூல் ஒன்றில் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பல்வேறு விஷயங்களை எதிர்மறையாக குறிப்பிட்டு இருக்கிறார். அவர் முன் முடிவுகளுடன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். எனவே, அவர் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராக கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது , ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்க முடியாது என்றும், இதன் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.