டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் 40 சதவீதம் வரை அதிரடியாக பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதாக டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரெயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக முன்பு இருந்த ரூ.30-ஐ பத்து ரூபாய் குறைந்து ரூ.20-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணமாக இதற்கு முன் இருந்த ரூ.180-ஐ தற்போது ரூ.100-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் பயணிகள் பலமுறை சென்று திரும்பி வரும் வகையில் மல்டிபிள் ட்ரிப் கார்டுகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது அறிமுகமாகியுள்ள கட்டண குறைப்பில், 30 முறை, 45 முறை, 60 முறை ட்ரிப் கார்டுகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்னும் கட்டண குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு மினிமம் சார்ஜ் ரூ.9, மேக்ஸிமம் சார்ஜ் ரூ.40 மட்டும் தான் செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.