தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு – ஒன்றுகூடியது மாணவர் இயக்கங்கள்!

தமிழீழ விடுதலைக்கான மாணவர் – இளைஞர் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு” என்ற இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னையில் நடைப்பெற்றது. பல்வேறு மாணவர் அமைப்புகளும், அரசி்யல் கட்சிகளும், அமைப்புக்களும் பங்கேற்றன. உணர்ச்சி கவிஞர் காசி.ஆனந்தன், மக்கள் கவிஞர்.இன்குலாப், சி.மகேந்திரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கத்தில் ஜாதிய வெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜீக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவர்கள் உரையாற்றினார்கள். அதன்பின் மக்கள் கவிஞர். இன்குலாப் கலந்துக்கொண்டு ஈழப்போரில் உயிர்நீத்த கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மாணவர்களும் இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் வீர வணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மக்கள் கவிஞர் இன்குலாப் பேசுகையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தினால் தனித் தமிழீழம் அமையும் என்று தனக்கு நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார். அரசியல் கட்சிகளை விட தனக்கு மாணவர் மற்றும் இளைஞர் கூட்டியக்கம் மீது அதிக நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேராசிரியர் மணிவண்ணன் உரையாற்றினார். தமிழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் புலம்பெயர் சமூகத்துக்கு போராடப் புது புத்துணர்வு அளித்திருக்கின்றது. இலங்கை அரசின் மீது இந்தியாவிலுள்ள மாறுப்பட்ட கருத்தை வெளியுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது எழுச்சிமிகுந்த இளைய சமூகத்தின் போராட்டமாகும். இலங்கையின் ஆட்சிமாற்றம் ஜனநாயகத்திற்கு எவ்வகையிலும் வழிவகுக்காது. தறசமயம் உள்ள சூழலில் பன்னாட்டு விசாரணை மட்டுமே தமிழீழ விடுதலைக்கு அடித்தளமிடும். தமிழகத்தின் ஒன்றுப்பட்ட குரலில் பன்னாட்டு விசாரணையை வலியுத்த வேண்டும். அதுவே தனித் தமிழீழத்திற்கான தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் பேசிய ஊடகவியாளர் ஆழி.செந்தில்நாதன், மத்திய அரசின் வெளியுறவுத் துறை என்ன செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தெளிவாக வகுக்கவேண்டும். மத்திய அரசுக்கு வைக்கும் கோரிக்கை தெளிவுடன் செயல்வடிவம் கொண்டதாக இருக்கவேண்டும். அக்கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் ஒர் அணியில் நின்று போராட வேண்டும்.

தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாணவர் தலைவர் இளங்கோவன் கூறுகையில், தமிழிழத்திற்கான போராட்டம் பின்னுக்குச் செல்ல காரணம் தமிழகத்திலுள் அதிமுக, திமுக அரசே ஆகும். தமிழக மாணவர்கள் ஜாதியை ஒழித்து அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் இயக்கத்தை சேர்ந்த பிரகாஷ், தமிழக வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பை போன்று மாணவர்கள் இளைஞர்கள் கூட்டியக்கமும் அமைய வேண்டும். இதுபோன்ற எழுச்சி மிகுந்த கருத்தரங்கம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும். கிராமங்களிலுள்ள உணர்வுமிக்க இளைஞர்களை வீதிக்கு அழைத்து வந்து போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் பிறகு ஆன்றோர் அவையில் மருத்துவர் எழிலன், விடுதலை புலிகள் போன்று போராடும் மாணவர்களும் இளைஞர்களும் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இளைய சமூகம் மத்தியில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் அறவே இருக்கக்கூடாது என வேண்டுகோள் வைத்தார். தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து, ஜாதிய வேறுபாடுகளை களைந்து தலைவர் வே.பிரபாகரன் வழியில் நின்று போராட வேண்டும். அப்போதே தனித்தமிழீழம் சாத்தியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அறிவாயுதம் பத்திரிக்கையின் ஆசிரியர் வழக்கறிஞர் அமர்நாத் குறிப்பிடுகையில் பொது வாக்கெடுப்பு விரைவில் தமிழீழத்தில் நடக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றை நோக்கத்துடன் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

”தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு ” என்ற இன எழுச்சிக் கருத்தரங்கத்தின் ஆன்றோர் அவையின் சிறப்புரையை உணர்ச்சி கவிஞர் காசி.ஆனந்தன் வழங்கினார்.  நிகழ்வின் வரவேற்புரை மற்றும் தொகுப்பினை தோழர்.செம்பியன் வழங்கியுள்ளனர்.

இன எழுச்சிஇயக்கங்கள்கருத்தரங்கம்கரும்புலிகாசி ஆனந்தன்சென்னைதனித் தமிழீழம்மாணவர்வீர வணக்கம்
Comments (0)
Add Comment