தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தியது.
சென்னையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டியது. பின்னர் மாலையில் திடீரென வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் அப்பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து நாசமானது.
அந்தியூரை அடுத்த வட்டக்காடு அருகே உள்ள கிழங்கு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையில், அங்கு பயிரிடப்பட்டிருந்த 500 வாழை மரங்கள், ½ ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை, தேவர்மலை, ஈரெட்டி, மடம் ஆகிய பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, பொய்கை, செதுவாலை பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருவண்ணாமலையில் நேற்று மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நின்ற தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது.
வந்தவாசியில் இடி-மின்னலுடன் நேற்று மாலை 20 நிமிடம் நல்ல மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் மாடு ஒன்று பலியானது.
பெங்களூருவில் கடந்த 3 மாதங்களாக வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கத்தால் பெங்களூரு வாசிகள் மிகவும் தவித்து போய் விட்டனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் கனமழை பெய்வதற்கான அறிகுறி தெரிந்தும், லேசான தூறலுடன் மழை ஏமாற்றியது.
அங்கு நேற்று பிற்பகலில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பெங்களூரு நகரில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் ஊட்டி நகரின் பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது.
கோவை மாவட்டத்தில் கோவை மாநகரம், துடியலூர், மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி மற்றும் சில இடங்களில் நேற்று மாலை சிறிது நேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், அரூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.