தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் அனைத்தையும் மூட வேண்டும் – வைகோ

இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தைத் தாய் வீடாக நம்பி அகதிகளாக வருவோரில் குறிப்பிட்ட சிலரைச் சிறப்பு முகாம் என்ற பெயரால் அமைக்கப்பட்டுள்ள சித்ரவதைக் கூடங்களில் ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்திடும் கொடுமைக்கு ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆளாகி தவிக்கின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் இரண்டு ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி, அடைக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 32 ஆகும். இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இவர்களது குடும்பத்தினர் முறையான குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று பல்வேறு அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த 32 பேரும் தங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் அகதி முகாம்களில் தங்க வைக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை 22 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி உள்ளனர். எனினும் இவர்கள் சட்டவிரோதமாகத் தொடர்ந்து சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாழ்வே முடிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தாய்த் தமிழகத்திற்குத் தஞ்சமென்று நம்பி வந்தவர்களை, அகதிகளுக்கான சர்வதேச வழிகாட்டு நெறிகளின்படி தங்க வைத்து பராமரிக்க வேண்டிய மத்திய – மாநில அரசுகள் அவர்களின் வாழ்வையே இருட்டாக்கி வருகின்றன.

சிறப்பு முகாம்களில் இருந்து உடனடியாகத் தங்களை விடுதலை செய்து அகதிகள் முகாம்களுக்கு மாற்றக்கோரி, 18.11.2014 மதியம் 12 மணி அளவில், திருச்சி சிறப்பு முகாமைச் சேர்ந்த 22 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளத் துணிந்துள்ளனர். இவர்களில் 3 பேர் நினைவிழந்து அபாய கட்டத்திலும், எஞ்சிய 19 பேர் கவலைக்கிடமான நிலையிலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் பேரதிர்ச்சியைத் தருகின்றன. இவர்களைப் பாதுகாக்கத் தேவையான மருத்துவ வசதிகளை முழுமையாக அளிக்க வேண்டும்.

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 32 பேரை விடுதலை செய்வதுடன், தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் அனைத்தையும் மூட வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
20.11.2014

அரசுஆண்டுஇனவெறிஇலங்கைகொடுமைசிங்களம்சித்திரவதைசிறப்புதமிழகம்தாய்திருச்சிபாதிப்பு.மாதிமுகமுகாம்வீடுவைகோ
Comments (0)
Add Comment