தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறது – தெலுங்கானா குழு

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இந்திய அளவில் முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்களை வந்து பார்வையிட்டு தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில அமைச்சரவை துணைக்குழு தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் கே.லட்சுமிரெட்டி தலைமையிலான 27 பேர் அடங்கிய பொறியியல் கட்டுமான குழு, சுகாதாரத் துறை குழு மற்றும் நிதிக்குழு சென்னை வந்துள்ளது. சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வருகை தந்த இக்குழுவினரை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மந்திரி கே.லட்சுமி ரெட்டி “இந்தியாவிலேயே சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு மாநிலம் முன்னணி வகிக்கிறது.

தமிழ்நாட்டில் தாய்சேய் நலத்திட்டங்கள், பொது சுகாதார திட்டங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முதல் –அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை அறிந்த தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் தமிழ் நாட்டிற்கு சென்று அங்கு செயல்படுத்தப்படும் சுகாதாரத்திட்டங்களை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து வரும்படி அறிவுறுத்தியதின் அடிப்படையில் சென்னைக்கு வருகை தந்து தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பற்றி கேட்டறிந்தோம்.

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறது. தமிழக சுகாதார திட்டங்களை தெலுங்கானாவும் செயல்படுத்த ஆர்வமாக உள்ளோம்’’ என்று தெரிவித்தார். இன்று 2–வது நாளாக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு தெலுங்கானா குழு சென்றது. ரத்த வங்கி, விஷ முறிவு, சிறு நீரகம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பார்த்தனர். பின்னர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை பார்வையிட்டனர். எழும்பூரில் உள்ள தாய் பால் வங்கி, பச்சிளங் குழந்தைகள் வார்டு ஆகியவற்றை பார்த்து அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புகுழுசெய்திஜெயலலிதாதெலுங்கானாநல்வாழ்வுதுறைமக்கள்வெளியிடல்
Comments (0)
Add Comment