நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் பாரதியஜனதா கட்சி சார்பாக மனோகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பாஜக வேட்பாளர் மனோகரை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன்சுவாமி கலந்துக்கொண்டு பேசுகையில், ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது ஒரு ரூபாய் கூட் சொத்து இல்லை, ஆனால் தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கு ரூ120 கோடி சொத்து உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறப்போகிறார். ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண்.
1990-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற போது கருணாநிதி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்பு அதிமுக அரசு வந்தபோது ஊழல்கள் நடைபெற்றதால் அதையும் எதிர்த்தோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஊழல் தான் காரணம். எங்கள் கட்சிக்குள்ளேயே தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விடுதலை புலிகள் ஆதரவாளர் என காங்கிரஸ்காரர்களே கூறி வருகின்றனர். அப்படி இருக்கையில், விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி உயிர்நீத்த இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் விடுதலை புலிகளின் ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால் வறண்ட பாலைவன நாடுகளான இஸ்ரேல், சவுதி போன்ற நாடுகளில் 24 மணி நேரமும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஊழல். தமிழகத்தில் உள்ள கடற்கரை மணலில் அதிகஅளவில் தோரியம் உள்ளது.
இதை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு தடையில்லை மின்சாரம் வழங்க முடியும் ஆனால் இதிலும் ஊழல் உள்ளதால் இத்திட்டங்கள் தொடங்கப்படாமலேயே உள்ளது. ஏழை எளியவர்களுக்கு தேவை அடிப்படை தேவை அதை தவிர்த்து டிவி, ஸ்கூட்டர் வழங்குவதெல்லாம் உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்படும் வரி பணம் தான். அம்மா உணவகம், அம்மா பள்ளிக்கூடம், அம்மா ஸ்கூட்டர் போல் விரைவில் அம்மாவிற்கு ஜெயிலும் வரும். தேவர் சமுதாயத்தை பயன்படுத்தி சசிகலா அரசியல் செய்து வருகிறார். முத்துராமலிங்க தேவர் இருந்தார் அவர் எனது சொத்து எல்லாம் நாட்டிற்காக என்றார். ஆனால் சசிகலாவோ நாட்டின் சொத்து எல்லாம் எனக்கே என கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 2 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் தண்டனை அனுபவிக்க போகிறார்கள். அதே போல் அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் நீதிமன்றத்தில் நிற்கவைத்துள்ளோம் அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்போம்.
நரேந்திரமோடி எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் பேசுவதாக எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அவர் ஊழலும் செய்யவில்லை, அவரது அமைச்சர்களும் ஊழல் புகார்களுக்கு ஆளாகவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊழல். எனவே ஊழலற்ற ஆட்சிஅமைய பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மனோகரனுக்கு வாக்களியுங்கள் என்றார்.