சென்னை ஐகோர்ட்டில், பாடம் நாராயணன் என்பவர் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழ்நாடு டாஸ்மாக் சட்டவிதி 8(1)-ன்படி, நகர்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரத்திலும் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடை வைக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்த சட்டவிதியை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும். வழிப்பாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து, நகர்புறம் என்றால் 500 மீட்டர் தூரத்திலும், கிராமப்புறம் என்றால் 1000 மீட்டர் தூரத்திலும் மதுபானக் கடைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நில அளவு மற்றும் எல்லைகள் நிர்ணயச் சட்டத்தின் விதி 4-ன் படி, ஒரு அதிகாரியை தமிழக அரசு நியமிக்கவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரி, வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மதுபானக் கடைகள் அமைந்துள்ளது? என்பதை அறிவியல் பூர்வமாக அளந்து பார்க்கவேண்டும் என்று நாங்கள் கருத்து தெரிவித்தோம்.
ஆனால், டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்கள் ஆகியவைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளதா? என்பது குறித்து கணக்கு எடுக்கப்படுகிறது. இந்த பணியின்போது, நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைவிட குறைவான தூரத்தில் மதுபானக் கடைகள் இருந்தால், மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதிப்பெற்று, அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 776 மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? என்பதை ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. இந்த ஆய்வு பணிக்கு 6 மாதமும், அதன்பின்னர் விதிமுறைகள் மீறி உள்ள கடைகளை அகற்ற 6 மாதமும் தேவை என்று கால அவகாசமும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள இடம் குறித்து ஆய்வு செய்து, அவ்வாறு ஆய்வில் எத்தனை கடைகள் இடம் மாற்றப்பட உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக வருகிற செப்டம்பர் 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.