தமிழகத்தில் புதிய மின் பாதை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த ஒப்புதலை அளித்திருக்கிறது. ஆயிரத்து 593 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தன்னம்பட்டியில் 400 கிலோ வோல்ட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது தவிர வேறு பல மின் நிலையங்களின் திறன் அதிகரிக்கப்படுவதுடன் பாதைகளும் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையி்ல் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது. மின்பாதை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாததுதான் இதற்குக் காரணமாக கூறப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாகத்தான் புதிய மின்பாதை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.