கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே, தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கும் போது வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படும். இந்த காலகட்டங்களில் மின்சாரத்தின் தேவையும், குடிநீரின் தேவையும் அதிகரிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைகாலங்களில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தது.
இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மாதம் (பிப்ரவரி) தொடக்கத்திலேயே மின்சாரத்தின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. இதற்கு ஏற்ப அனல்மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், கியாஸ் மின்சார உற்பத்தி நிலையங்கள், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்பட்டதால் தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி இரவு 6.50 மணிக்கு 14 ஆயிரத்து 79 மெகாவாட்டும், 25-ந் தேதி இரவு 6.50 மணிக்கு 14 ஆயிரத்து 78 மெகாவாட்டும், 26-ந் தேதி இரவு 6.55 மணிக்கு 14 ஆயிரத்து 106 மெகாவாட் மின்சாரமும் பயன்படுத்தப்பட்டது. இருந்தும் போதுமான உற்பத்தி இருந்ததால் முறையாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோன்று கோடைகாலத்திலும் மின்சார வினியோகம் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மேலும் எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே பகல் பொழுதில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுவதால் மின்சாரத்தின் தேவையும் 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது அதற்கு ஏற்றார் போன்று அனல்மின்நிலையங்களில் மின்சார உற்பத்தியும் நடந்து வருகிறது. காற்றாலைகளும் தற்போது சீசன் தொடங்குவதற்கு முன்பாக சராசரியாக 300 முதல் 500 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.
தேர்தல் வேறு வரவிருப்பதால் மின்சாரத்தின் தேவை இன்னும் அதிகரிக்க கூடும். முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக, கோடைகாலங்களில் அனல்மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்காத வகையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது இப்படி இருக்க ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைமழை பெய்தால் ஓரளவு மின்சாரத்தின் தேவை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், சீரான மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.