கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு தினமும் 2 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அணைகளில் தற்போது தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீரை திறக்க முடியும்?. அதனால் தண்ணீரை திறந்துவிட இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.
எந்தெந்த அம்சங்களை கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.