தமிழக சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தலின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்று சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை தவிர கூடுதலாக 700 வாக்குச்சாவடிகள் அமைக்க அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்னர் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழகத்தில் எந்த எந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் 9,630 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 9 ஆயிரத்து 224 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டன.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிக பதற்றமானவை, மிதமான பதற்றமானவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா, வீடியோ கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். மேலும் அந்த வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 400 கம்பெனி துணை ராணுவத்தினரை அனுப்புமாறு தேர்தல் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் 275 முதல் 300 கம்பெனி வரை அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் துணை ராணுவத்தினர் மே மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருவார்கள். ஒரு கம்பெனியில் 72 பேர் இடம் பெற்றிருப்பார்கள். தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரத்து 449 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு பற்றி நடிகர் சித்தார்த் நடித்த விழிப்புணர்வு குறும் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் டெலிவிஷன் மற்றும் வானொலியில் மத்திய அரசின் விளம்பரங்கள் வருவதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அந்த கடிதத்துக்கு பதில் வந்த பின்னர் விளம்பரங்கள் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.